

"ஜன்னலுக்கு வெளியே
யதார்த்தமாய் கடக்கின்றன..
ஏராளமான கவிதைகள்.
ஒரு நீண்ட தூர இரயில் பயணம்.!!"
"எங்கோ எதற்கோ நடுவழியில்,...
நள்ளிரவில் நிறுத்தப்பட்டது
இரயில் வண்டி.
மெல்ல இறங்கி..
இருட்டில் நடந்து பார்த்துவிட்டு..
மீண்டும் இரயிலேறிக் கொண்டது
மனது.!!"
"இப்போதும் உறுத்துகிறது..
வேடிக்கை பார்த்து
கையசைத்த சிறுவனுக்கு
இரயில் பெட்டியிலிருந்து
நாமும் 'டாட்டா' காட்டியிருக்கலாமோவென்று.!!"
"எப்படியேனும்
ஒவ்வொரு இரயில் பயணத்திலும்
அபாயச் சங்கிலியைப்
பிடித்து இழுத்து விடுகிறது...
மனது.!!"
"இரயிலின் ஜன்னலும்,கதவும்
இறுக மூடப்பட்ட பின்பு..
என்னவானதென்று தெரியவில்லை..
மழை.!!"
"இரயில் வண்டியோ..கூட்ஸ் வண்டியோ
அருகிருந்து பார்க்கும் போதெல்லாம்
அனிச்சையாய் தோன்றுகிறது...
ஒன்று..இரண்டு..மூன்று............"
"உடம்பை பாத்துக்கங்க..கேட்டதா சொல்லுங்க...
போன் பண்ணுங்க..மெயில் பண்ணுங்க....
கேட்டுக் கேட்டு அலுத்திருக்குமோ...
இரயிலின் ஜன்னல்கள்.!!"
"பிரிவு..ஊடல்-கூடல்..
ஆனந்தம், ஆர்ப்பாட்டம்
அனைத்தும் ஒரு சேர
அனுபவித்து விட்டு
படக்கென்று வெறிச்சோடிப் போகிறது
நடைமேடை..
ஒரு பிரதான இரயில் கிளம்புகிறது.!!"
"ஞாபகங்களை சுமந்து கொண்டு
மனிதர்களை மட்டும்
வழியனுப்புகிறது..
இரயில் நிறுத்தம்.!!"
"கூட்ஸ் வண்டியோ,
பாராமரிப்பு வண்டியோ
வரும்போது
சட்டென்று ஏமாறுகிறது..
இரயில் பார்க்கக் காத்திருந்த..
சிறு வயது.!!"
"நல்லதோ..கெட்டதோ
ஏதேனுமொன்றையாவது
ஏற்றி வருகின்றன..
தினசரிகள்..இரயில் பற்றி.!!"
"இரயிலை இங்கேயே நிறுத்தி
இறக்கி விடவா என
மிரட்டுகிறார் பரிசோதகர்....
மேல் பெர்த்திற்கு
ஏறவும், இறங்கவுமாய்
இருந்த சிறுவனை.
புன்னகைகிறாள் அம்மா.!!"
"ஒரு அதிவேக இரயில் வண்டி
மிக அருகில் கடக்கும்போது
அதிர்வதைப் போலிருந்தது மனது.
நீ நெருக்கமாக
என்னைத் தாண்டி நடந்தபோது.!!"
"சக பயணிகளோடே
இறங்கி விடுகின்றன..
பயணங்களின் போது
உதிக்கின்ற கவிதைகள்.!!"
"எங்கேயென்று தேடுவது..
மீண்டும் சந்திப்போம்
என்று கைகுலுக்கிப்
பிரிந்த..
என் இரயில் சிநேகிதர்களையெல்லாம்.!!"
"இந்த இரயில் பெரும்பாலும்
இவ்வளவு தாமதமாகது
என்று சக பயணிகளிடம்
சொல்லிக் கொண்டிருந்தனர்..
மாதா மாதம் மகன்கள்
வீட்டிற்குப் பயணிக்கும்
வயதான தம்பதிகள்.!!"
"இன்னமும் அந்த
இரயில் நிலையத்தில்
மிச்சமிருக்கும்...
ஒவ்வொரு ஜன்னலாய்
உன்னைத் தேடிய தேடல்கள்.!!"
"இரயிலில் இந்த முறை
கைக்குட்டை விற்பவரிடம்..
சென்ற பயணத்தின் போது
பேரம் பேசி
பழைய புத்தகங்கள்
வாங்கிய ஞாபகம்!"
"ஒவ்வொரு
இரயில் நிறுத்ததிலும்
ஜன்னல் வழியே கை மாறுகின்றன..
காபியும்.....காசுகளும்.!!"
"ஒற்றைத் தண்டவாளத்தைப் போன்றது...
நீ ஏற்றுக் கொள்ளாத
என் காதல்.!!
"பயணிகள் கவனிக்கவும்..வண்டி எண்........'
அறிவிப்பாளினியின் குரல்
ஒலித்துக் கொண்டிருந்தது....
இரயில் நிலையம் விட்டு
வெகு தொலைவு வந்து விட்ட
மனதுக்குள்.!!"
"ஏதேனும் பணி நிமித்தம்
அவசரமாகச் செல்லும்போது
மூடப்படும் இரயில் பாதை கதவின்
மீதான கோபம் .....இரட்டிப்பாகிறது...
தாமதமாக வந்தும், மெதுவாக உருளும்
கூட்ஸ் வண்டியைப் பார்க்கும்போது.!!"
"நானறியாமல் குறுக்கிட்டாய்
என் வாழ்க்கைப் பாதையில்.
தடம் புரண்டது மனது.!!"
-த.பிரபு குமரன்
4 comments:
பிரியமுடன் பிரபு - அழகான பெயர் தெரிவு. புதிய வலைப்பூவுக்கு வாழ்த்துக்கள். தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள் தளங்களில் இணையலாம்.
இரயில் பற்றி இவ்வளவு அழகான கவிதைகளா?
வாழ்த்துக்கள் பிரபு.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள் பிரபு, வலைப்பூவிற்கு வருக வருக என வரவேற்கிறேன். தொடங்கிய சில நாட்களிலேயே பல கவிதைகள். பாராட்டுகள். அன்புடனில் இக்கவிதைக்கு ஒரு நீண்ட ( இரயில் வண்டித் தொடர் போன்ற)மறு மொழி இட்டிருக்கிறேன். வாழ்த்துகள். தொடருங்கள்.
நண்பரே, மதுரை யா - எங்கே - நானும் மதுரையில் தான் இருக்கிறேன்.
Post a Comment