Monday, February 18, 2008
ஞாயிற்றுக்கிழமை
"ஞாயிற்றுக்கிழமை காலை.
ஒட்டடைக்கம்பு
தேடுகிறார் அப்பா.
பணியாரக்கம்பி
தேடுகிறாள் அம்மா...!"
"வழக்கமான
சோம்பலுடனே கழிந்தது..
இந்த ஞாயிற்றுக்கிழமையும்....!"
"ஞாயிறு மதியம், பனிரெண்டு மணி.
வீட்டிலும்,தெருவிலும்
காற்றில் அசைவ வாசனை...!"
"நினைத்துக் கொண்டபடி
வெகுநேரம் தூங்க முடிந்ததில்லை..
எந்த ஞாயிற்றுக்கிழமையும்..!"
"இன்னும் சந்திக்கவே இல்லை.
ஏதேனுமொரு
ஞாயிற்றுக்கிழமையில் சந்திக்கலாம்
என சொல்லிக்கொண்ட பலரை...!"
"பள்ளிப்பிராயத்தில்
வேண்டுதல்கள் அதிகம்.
ஞாயிற்றுக்கிழமை முடியாமலிருக்கவும்,
திங்கள்கிழமை விடியாமலிருக்கவும்....!"
"பொறாமையாயிருக்கிறது.
தினமும் ஞாயிற்றுக்கிழமை
அனுபவிக்கும் குழந்தைகளையும்,
வயதானவர்களையும் நினைத்து...!"
"எப்படியாயினும் சனிக்கிழமை
மதியமே தொற்றிக்கொள்கிறது...
ஞாயிற்றுக்கிழமையின்
ஞாபகமும், சந்தோஷமும். - கூடவே
திங்கள் பற்றிய திகிலும்...!"
-த.பிரபு குமரன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment