Monday, February 18, 2008

மழை


"மழைக்காலம்தான்.
எனினும்,
மழை வரும் முன்பே
நனைய ஆரம்பித்துவிடுகிறது
மனசு.!"

"எதிர்பார்த்து....
வராத மழையால்,
எப்போதோ நனைந்த
ஈர நினைவுகளோடு
வீடு வந்தேன்."

"கூட்டம் நெட்டித்தள்ளும்
நகரப் பேருந்துகளில்
கேட்பாரற்றுக் கிடந்தன...
ஜன்னலோர இருக்கைகள்,
ஒரு பெருமழை நாளில்."

"நடுநிசியில்,உறங்கும் பொழுதுகளில்
நானறியாமல் பெய்துவிட்டு
நின்று போகும்
எனக்குப் பிடித்த மழையைப்போல,
நான் கவனித்திராத
எத்தனையோ தருணங்களில்
என்னைக் கடந்திருக்கக்கூடும்
நீ..!"

"நனைந்து கொண்டிருந்தேன்...
உனக்கும் பிடிக்கும்
என்று நீ மழை பற்றி
பேசிக்கொண்டிருந்த..
ஒரு மழையற்ற பொழுதில்."

"ஒரு மழை நாளின்
மாலை வேளையில்
நிகழ்ந்தது
நம் கடைசிச் சந்திப்பு.
அன்று
என் மீது மட்டும்
வெந்நீராக விழுந்தது மழை."

"மழையில் நனையக்கூடாது..
என்ற உன் இதமான
கண்டிப்பைவிட
சுகமானது.....
நனைந்த பின் துவட்டிவிடும்
உன் அன்பு."

"சிறு வயதில்..
மழை நீரில்
இழுத்துச் செல்லப்பட்ட
என் காகிதக் கப்பல்கள்
எங்கே தரை தட்டியிருக்கும்..?"

"மழைக்காலம்
வந்தாலே
வந்துவிடுகின்றன..
சந்தோஷமும்,
சகதியும்."

"கண்டிப்பாய் மழை வரும்.
இந்த பள்ளிக்கூட மணி
சீக்கிரம் அடித்தாலென்ன?
இன்றாவது நனைய வேண்டும்."

"அடாத மழை.
கொல்லைப்புற சுவரில்
விடாமல் இரை தேடிய
எறும்புகள்
என்னவாகியிருக்கும்..?"

"ஒவ்வொரு
மழைக்காலத்திலும்
நிகழ்கிறது...
குடை எடுத்துச் செல்ல
மறப்பது."

"மழை நாட்களில்...
வேண்டுமென்றே
நனைவதும் பிடிக்கிறது..
குடை இருந்தும்..!"

-த.பிரபு குமரன்.

5 comments:

bala said...

HI PRABU,

No words to praise the poem! (this is the best words to praise, if u r unable to praise anyone)

waiting for the printed vesion of ur poems!

நாடோடி இலக்கியன் said...

//மழையில் நனையக்கூடாது..
என்ற உன் இதமான
கண்டிப்பைவிட
சுகமானது.....
நனைந்த பின் துவட்டிவிடும்
உன் அன்பு//


உங்கள் கவிதை மழையால் இதயத்தில் சாரல்!
அசத்தலான ஆரம்பம் நண்பரே!
வாழ்த்துகள்!!

நித்யன் said...

பிரியமுள்ள பிரபுவிற்கு...

மழையும் மழைசார்ந்த உங்கள் நினைவுச் சிதறல்களும் பிரமாதம்.

உங்களின் கவிதை வரிகள் என்னையும் உடனடியாக எழுதத் தூண்டுகின்றன.

“பெரிய மழை
சின்னக் குடை
நாம் நனையாததால்
நனைந்து சிரிக்கின்றன
நம் வெட்கங்கள்...”

மிக்க நன்றி நண்பரே...

அன்பு நித்யகுமாரன்

Prabu said...

தங்கள் வாழ்த்துச் சாரலுக்கு மிக்க நன்றி நாடோடி இலக்கியன்.

-த.பிரபு குமரன்

Prabu said...

//உங்களின் கவிதை வரிகள் என்னையும் உடனடியாக எழுதத் தூண்டுகின்றன.//

--மிக்க மகிழ்ச்சி நித்யகுமாரன். நன்றி

//“பெரிய மழை
சின்னக் குடை
நாம் நனையாததால்
நனைந்து சிரிக்கின்றன
நம் வெட்கங்கள்...”//

--மனதை வருடும் இதமான கவிதை. அருமை.

-த.பிரபு குமரன்