Monday, February 18, 2008

இதுவும் உனக்கான வருடம்.....


"உன் மீதான
என் காதலை
நீ ஏற்றுக்கொள்ளும்
தினத்திலிருந்து பிறக்கும்...
எனக்குப் புது வருடம்."

"காத்திருக்கிறேன்.
மீண்டும் உன்னை
வாழ்த்தப் போகும்
உன் பிறந்த தினத்துக்காகவும்,
பண்டிகைகளுக்காகவும்."

"மிகச் சாதாரண
நாட்களாகி விடும்
உன்னைக் காணாத தினங்கள்.
ஞாயிற்றுக்கிழமையில் வந்துவிடும்
அரசு விடுமுறை போல."

"நம்பிக்கையிருக்கிறது.
உன்னிடம் எதுவும்
சொல்லப் போவதில்லை...
வரப் போகும்
காதலர் தினத்திலும்."

"கோயில் பிரகார
புறாக்களைப் போல
பதைபதைத்து,
சிறகடித்துக் கொண்டிருக்கின்றன..
சென்ற வருடம் உன்னிடம்
சொல்லாத சொற்கள்."

"நீயே நிரம்புவாய்.
இந்த வருட
நாட்குறிப்பின்
பக்கங்களிலும்."

"இந்த ஆண்டின்
இலட்சியமாக...
இன்னும் அதிகமாக
நேசிக்க வேண்டும் உன்னை."

"தவணை முறையிலாவது
தந்து விடுவேன்..
பிப்ரவரி
இறுதியில்
இல்லாமல் போன
நாட்களுக்கான அன்பையும்."

"இந்த வருடமும்
விற்க மாட்டார்கள்
என்னிடம்,
உன் பெயர் முதலில்
எழுதத் தெரியாத
பேனாக்களை."

"உன்
முதல் சந்திப்பிற்கு
முந்தைய.....
வீணாய்ப்போன
வருடங்கள் குறித்த
வருத்தம் எனக்கு."

-த,பிரபு குமரன்.

No comments: