Monday, February 18, 2008

இழந்த சொத்துக்கள்









சகதிக்குள்
சிக்கிக்கொண்ட
என் காகிதக் கப்பல்.

புதர்களுக்குள்
புதைந்து போன
என் கிட்டிப்புள்.

வாத்தியாரிடம் தந்துவிட்டு
வாங்க மறந்த
என் சைனா பேனா.

பெரிய பையன்களுடன்
விளையாடித் தோற்ற
என் தீப்பெட்டிப் படங்கள்.

விளையாட்டாய்ப் போட்ட சண்டையில்
விட்டுப் போன...
புதுச்சட்டைப் பொத்தான்கள்.

ஓட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டு
தொலைந்து போன
என் கோலிக்குண்டுகள்.

அடுத்த வீட்டு நண்பன்
ஆக்கர் போட்டு உடைத்த
என் அழகான பம்பரம்.

திரையரங்கில்
விட்டு வந்த
புதுக் காலணிகள்.

பள்ளியில் பறிகொடுத்த என்
பலப்பக் குச்சிகள்.

கரன்ட் கம்பிகளில்
மாட்டிக் கொண்ட என்
வண்ணக் காத்தாடிகள்.

நண்பர்கள் முந்திக் கொண்டு
உடைத்த என்
மணல் வீடுகள்.

எதிர் வீட்டின்
ஜன்னலைத் துளைத்த
என் கிரிக்கெட் பந்து.

ஆளுக்குப் பாதி என்ற பின்னும்
நண்பனே விழுங்கிவிட்ட
என் நாலணா மிட்டாய்.

எட்டு நாளாய் வளர்த்து
எலி பறித்துப் போட்ட
என் எலுமிச்சைச்செடி.

திமிறத் திமிற...
மெஷின் வைத்து
வெட்டப்பட்ட முடி.

முதல் மதிப்பெண் வாங்கினால்..............
சைக்கிள்...!

இழந்தசொத்துக்கள்..

கடைசிவரை நான்
வாங்காமலே போன சைக்கிளும்,
வாங்காத சைக்கிளில்
ஏறித் தொலைந்து போன
என் பால்யமும்.!


-த.பிரபு குமரன்.

2 comments:

cheena (சீனா) said...

இளமைக் காலத்தில் இழந்த சொத்துக்களுக்கு கணக்கே கிடையாது நண்பா - எனது மகள் அவளது மகளுக்கு இன்னும் சொல்கிறாள் - சைக்கிள் தானே வாங்கித் தருகிறேன் - என்னை ஓரக் கண்ணால் பார்த்த படியே.

சக்தி சக்திதாசன் said...

அன்பின் தம்பி பிரபு,

வாழ்த்துக்கள் பொழிகிறேன்
வளரட்டும் வலைப்பூ
வளமிக்க இளந்தளிர்களால்
வாழட்டும் தமிழன்னை புகழ்
வீசட்டும் அவள் பூகழ் திக்கெட்டும்
விளங்கட்டும் தமிழ் திறன் உலகெங்கும்

அன்புடன்
சக்தி