Monday, February 18, 2008
கோலம்
"பண்டிகைக்கான கோலத்தை
முதல்நாள் இரவே
இட்டு விட்டு
உறங்கச் சென்று விடுகிறாய்.
மறுநாள் மறுபடியும்
உன்னைக் காண்பதற்காக
காத்துக் கிடக்கிறோம்
நானும், உன் கோலமும்."
"உன் கோலத்தின்
ஒவ்வொரு
வண்ணங்களிலும்
உன் கைவண்ணம்."
"அழித்து, அழித்து..
வலுக்கட்டாயமாக
வரைந்து கொண்டிருக்கிறாய்
வராத ஒரு கோலத்தை.
நான் தினமும்
உன் பெயரை
எழுதிக் கொண்டிருப்பதைப் போல."
"அடுத்த வீடுகளின்
கோலங்களைச் சென்று
இரசித்துக் கொண்டிருந்தாய்.
ஒரு கோலம் நகர்வதைப் பொல."
"வழக்கம் போலவே
கவனமாகத் தாண்டிச் செல்கிறேன்
உன் வாசலை.
அடுத்த சில நிமிடங்களில்
நீ கோலம் போடக்கூடுமென்று."
"உனக்குப் பெருந்தன்மை அதிகம்.
பக்கத்து வீட்டு கோலங்களைப் போய்
அழகென்று பாராட்டிக்கொண்டிருந்தாய்."
"தைப்பொங்கல் என்றால்
பானையும், கரும்பும்..
தீபாவளி என்றால்
தீபங்களும், மத்தாப்பும்..
கிறிஸ்துமஸ் என்றால்
தாத்தாவும், மணியும்... என்று
அடையாளப்படுத்தி கோலமிடுவாய்.
உன்
பிறந்த நாளுக்கும்
வரைகிறாய்...
மிக அழகான ஒரு கோலம்."
"முன்போல கிடைப்பதில்லை
என்று வருத்தப்பட்டுக் கொண்டாய் நீ.
ஆனால் உன் வாசலுக்கு வர
வழி தெரியாமல்
வருத்தப்பட்டுக் கொண்டிருந்தது
எங்கோ பூத்துக் கிடந்த
பூசணிப்பூ."
"வீட்டுக்குள் கோலமிட்டிருந்தன..
கலர் கோலத்தை
மிதித்து விட்டு வந்திருந்த
குழந்தைகளின் பாதங்கள்."
-த.பிரபு குமரன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment