


"காசு போடும் நேரம் தவிர
கடந்து போகும் நேரமெல்லாம்
குலுக்கிப்பார்க்கப்படுகிறது
மண் உண்டியல்.!!"
"தன்
குட்டி மகனின்
மண் உண்டியல் காசுகளிலும்
குடித்துக் குடித்தே
இறந்து போன ஒரு
இளம் அப்பாவின்
இறுதிச்சடங்கில் உடைக்கப்படுகிறது
ஒரு மண்பானை.!!"
"உண்டியல் உடைத்து
சில்லறைகள் பிரித்தாலும்
ஒட்டிக்கொள்கிறது மண்..
கைகளிலும்,
உடனே மாற்றும் ரூபாயிலும்!!"
"உண்டியல் வாய்க்குள்
சிணுக்கோலி நுழைத்து
உருவப்படுகின்றன காசுகள்.
முறுக்கோ,மிட்டாயோ வாங்குவதற்க்கு.!!"
"என்
உண்டியலை தலைகீழாக
உலுக்கி உலுக்கி
உருண்ட காசுகளிலிருந்து
வந்தன இரண்டு கலர் கோழிக்குஞ்சுகள்.......
ஏன்டா, பொழப்பத்த வேல பாக்குற...
என்றாள் அப்பத்தா.
ஏற்கனவே எலக்கணமா படிக்குற,
இன்னம் இது வேற, என்றாள் அம்மா.
கோழி வளக்குறேன்...
கொசு வளக்குறேனு, படிப்ப கோட்டை விட்டே......
கர்ஜித்தார் அப்பா.
என் காதில் எதுவும் விழவில்லை
கோழிகளின் கீச்..கீச் சத்தத்தில்.
என் கோழிக்குஞ்சுகளை
மதிக்கவில்லை யாரும் - என்னைப் போலவே.
ஆனால், வீட்டில் சுதந்திரமாகத் திரிந்தன,
என்னை விடவும்.
கோழிகளின்
நொழு,நொழு உடலும்,
வண்ணங்களும், சத்தங்களும்
பரவசப்படுதின என்னை.
உண்டியலில் கை வைக்கும்போதெலாம்
கோழிகளுக்கு கம்பும்,சோளமும்..
எனக்கு கமர்கட்டும்,சிவிங்கமும்.
ஆடைகளற்ற குழந்தை போல்
இன்னும் அழகாயின கோழிகள்...
வண்ணச்சாயம் போன பின்பு.
அடுக்களையிலிருந்து
அலறுவாள் அம்மா, 'டேய்..
இத எங்கியாச்சும் பிடிச்சுட்டுப் போ..
காலுக்குள்ளயே சுத்துது,
கொழம்பாயிரப் போவுது....!
என் மீதுள்ள கோபத்தில்
எதையாவது எட்டி உதைப்பார் அப்பா..
எச்சத்தை மிதிக்கும் போதெல்லாம்.
நானோ, கோழிகள் கூவி விழித்து
கோழிகளோடே உறங்கினேன்.
நாளடைவில்
என் குடும்ப உறுப்பினராயின
கோழிகள்.
உணவு வைத்து விடுவாள் அம்மா.
நான் வரத் தாமதமானாலும்.!
பக்கத்து வீட்டுப் பூனையை
குச்சி வைத்து விரட்டுவார் அப்பா..
கோழிகளைக் காக்க.
ஏய்யா..
கொட்டாங்குச்சில தண்ணி வச்சு மூடுய்யா
கொட்டானை, ராத்திரில குடிச்சுக்கும்
என்பாள் அப்பத்தா.
பின்னாளில்
இப்போதும் தோன்றுகிறது..
இறக்கைகளிலிருந்திருக்கலாம் எனக்கும்.
ஆம்.. வாங்கும் போது
மஞ்சள் நிறமிருந்த மஞ்சுளாவையும்,
பச்சை நிறமிருந்த பத்மாவையும்
பார்த்துக் கொண்டிருக்கும்போதே
படக்கென்று தூக்கிப்போன
பருந்திடமிருந்து
பறித்திருக்கலாம் விரட்டிச்சென்று.
இன்றும்.. சாலையோரங்களிலோ
மிதிவண்டியின் பின்னாலோ
கூடைகளிலிருந்து
கத்திக்கொண்டிருக்கின்றன..
கலர் கோழிகள்...
பருந்திடமும், பூனையிடமும் மற்றும்
என் போன்ற மனிதனிடமிருந்தும் காப்பாற்றும்படி.
வீட்டில்..
ஏதோ சத்தம் கேட்டு, திரும்பியபோது,
என் குட்டி மகள்
உடைத்துக்கொண்டிருந்தாள் மற்றுமொரு
உண்டியலை...!!
-த.பிரபு குமரன்
4 comments:
அன்புடன் பிரபுகுமரன்,
வாழ்த்துக்கள் உங்கள் வலைப்பூ தொடக்கத்துக்கு.
கருத்துக்களில் Word Verification எல்லாம் வேண்டாமே!
அன்புடன் புகாரி
அருமை அருமை - நண்பரே
கலர் கோழிக் குஞ்சுகள் - இளமைக்கால நினைவுகள் - அருமை. குடும்ப உறுப்பினரானவுடன் அனைவரும் - அப்பா உட்பட - காட்டும் அன்பு, கரிசனம், உணிடியல் உடைத்த இளம் தந்தையின் மரணத்தில் உடை படும் மண் பானை, கடக்கும் போது குலுக்கப் படும் உண்டியல், சிணுக்கோலி நுழைவது, ஆடையற்ற குழந்தைகளின் அழகு, வண்ண வண்ணக் கோழிக் குஞ்சுகளின் பெயர்களில் மனதுக்குப் பிடித்த தோழிகள் - அழகு தமிழ் - எளிமையான சொற்கள் - கவிதை அழகு.
பாராட்டுகள் - வாத்துகள் நண்பரே
Excellent poems... Keep going...and congrats for ur poems got published in kumudhjam..u deserve it
lovely
Post a Comment