Monday, February 18, 2008

உன்னைக் கண்டுபிடித்தேன்..






"மூன்றாவது வரிசையில்
நான்காவதாக நின்றிருந்தாய்
உன் பள்ளிக்காலப்
புகைப்படத்தில்.
உடனே உன்னைக் கண்டுபிடித்ததில்
அதிகம் ஆச்சர்யப்பட்டாய்
ஆனந்தப்பட்டதைவிட.
எனக்கேதும் ஆச்சர்யமில்லை..
என்னை நானே கண்டுபிடித்ததில்...!"

"உன்னுடனான பயணங்களில்
எனக்கும் பிடித்திருந்தும்
விட்டுக் கொடுக்கிறேன்..
ஜன்னலோர இருக்கையை....
நீ இயற்கையை
இரசிப்பதற்கும்,
நான் உன்னை
இரசிப்பதற்கும்..!"

"நீ
அறைந்து மூடும்
கதவில் ஊடலும்...
பின்
ஒளிந்து பார்க்கும்
ஜன்னலில்
என் மீதான
உன் காதலும்
வெளிப்படும்..!"

"மை
தீர்ந்து போகாத
என் பேனாக்களிலெல்லாம்
எழுதப்படாத
கவிதைகளாய் இருக்கிறாய்
நீ..!"

"புதிதாய் வாங்கிய
புத்தகத்தின்
வாசனையைப் போன்றது..
ஏகாந்தமான
உன் நினைவுகள்.!"

"எதையாவதும்
தொலைப்பதே
உன் வேலை என்பாள் அம்மா.
எப்படிச் சொல்வேன்
என்னைத்
தொலைத்ததை..?"

"உருப்படியாக
ஏதாவது செய்திருக்கிறாயா
என்பார் அப்பா.
என்றேனும் சொல்லவேண்டும்
உன்னைக்
கண்டுபிடித்திருப்பதை."


-த.பிரபு குமரன்

No comments: