Monday, February 18, 2008
மார்கழி
"அதிகாலை நான்கு மணி.
பரீட்சைக்காக
படித்தபோது
மனப்பாடமாகியது...
எங்கோ ஒலித்துக்கொண்டிருந்த
பஜனைப் பாடல்கள்."
"சென்ற வருடம் போல்
இந்த வருடம்
பனி அதிகமில்லை
என்று சொன்ன தாத்தா
இருமிக் கொண்டிருந்தார்
இந்த மார்கழி மாதமும்."
"ஒரு மார்கழி மாத
மழை நாளில்...
மின் விசிறியின்
வேகம் குறைத்ததும்
அதிகமாக கேட்க ஆரம்பித்தது..
தவளைகளின் சப்தம்."
"இழுத்துப் போர்த்தி
உறங்கத் தோன்றும்
அதிகாலைப் பனி நேரத்திலும்
எங்கோ விரைகிறது... ஒரு
அதிவேக இரயில் வண்டி."
"ஸ்வெட்டர் போட்டிருந்தன..
ஒரு மார்கழி மாத நாளின்
மதியத்தில்
மருத்துவரிடம் வந்த குழந்தைகள்."
"மீண்டும் தீண்டுவதற்கு
காத்திருந்தது ...
பின்னிரவுப்பனி,
சூடான தேநீரை
பருகி முடிக்கும் வரை."
"அதிகாலைப்
பேருந்துப் பயணம்.
குழந்தைக்கு
குல்லா எடுக்க
மறந்த மனைவியை
முறைக்கிறான் கணவன்."
"மாலை 7 மணி.
வெறிச்சோடிக் கிடக்கின்றன
தெருக்கள்.
குழந்தைகளுக்கு பதிலாக
விளையாடுகிறது பனி."
"வெகு நேரம்
உறங்கி எழுந்த படுக்கை விரிப்பை
உதறிய போது
சிதறி ஓடின...
விக்ஸ் டப்பாவும் - ஒரு
அமிர்தாஞ்சன் பாட்டிலும்."
"மார்கழி மாதத்து
அடர்ந்த பனி போல
பரவியிருக்கிறது
உன் நினைவுகள்."
"சிலருக்கு மட்டுமே
வருகிறது...
உறங்கும்போது எழுந்து
மின் விசிறியை
நிறுத்தும் சுறுசுறுப்பு."
"நான் கைகள் கட்டி
அதிகம் மரியாதை கொடுத்தது
மார்கழிப்பனிக்காகத்தானிருக்கும்."
"நகரம் நிறைகிறது..
பனியாலும்...
ஐயப்ப பக்தர்களாலும்."
-த.பிரபு குமரன்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//நான் கைகள் கட்டி
அதிகம் மரியாதை கொடுத்தது
மார்கழிப்பனிக்காகத்தானிருக்கும்//
அருமை!!
மிக்க நன்றி நாடோடி இலக்கியன்.
-த.பிரபு குமரன்
Post a Comment