Saturday, February 23, 2008
இரயிலும் இரயில் சார்ந்த இடமும் மற்றும் மனதும்......
"ஜன்னலுக்கு வெளியே
யதார்த்தமாய் கடக்கின்றன..
ஏராளமான கவிதைகள்.
ஒரு நீண்ட தூர இரயில் பயணம்.!!"
"எங்கோ எதற்கோ நடுவழியில்,...
நள்ளிரவில் நிறுத்தப்பட்டது
இரயில் வண்டி.
மெல்ல இறங்கி..
இருட்டில் நடந்து பார்த்துவிட்டு..
மீண்டும் இரயிலேறிக் கொண்டது
மனது.!!"
"இப்போதும் உறுத்துகிறது..
வேடிக்கை பார்த்து
கையசைத்த சிறுவனுக்கு
இரயில் பெட்டியிலிருந்து
நாமும் 'டாட்டா' காட்டியிருக்கலாமோவென்று.!!"
"எப்படியேனும்
ஒவ்வொரு இரயில் பயணத்திலும்
அபாயச் சங்கிலியைப்
பிடித்து இழுத்து விடுகிறது...
மனது.!!"
"இரயிலின் ஜன்னலும்,கதவும்
இறுக மூடப்பட்ட பின்பு..
என்னவானதென்று தெரியவில்லை..
மழை.!!"
"இரயில் வண்டியோ..கூட்ஸ் வண்டியோ
அருகிருந்து பார்க்கும் போதெல்லாம்
அனிச்சையாய் தோன்றுகிறது...
ஒன்று..இரண்டு..மூன்று............"
"உடம்பை பாத்துக்கங்க..கேட்டதா சொல்லுங்க...
போன் பண்ணுங்க..மெயில் பண்ணுங்க....
கேட்டுக் கேட்டு அலுத்திருக்குமோ...
இரயிலின் ஜன்னல்கள்.!!"
"பிரிவு..ஊடல்-கூடல்..
ஆனந்தம், ஆர்ப்பாட்டம்
அனைத்தும் ஒரு சேர
அனுபவித்து விட்டு
படக்கென்று வெறிச்சோடிப் போகிறது
நடைமேடை..
ஒரு பிரதான இரயில் கிளம்புகிறது.!!"
"ஞாபகங்களை சுமந்து கொண்டு
மனிதர்களை மட்டும்
வழியனுப்புகிறது..
இரயில் நிறுத்தம்.!!"
"கூட்ஸ் வண்டியோ,
பாராமரிப்பு வண்டியோ
வரும்போது
சட்டென்று ஏமாறுகிறது..
இரயில் பார்க்கக் காத்திருந்த..
சிறு வயது.!!"
"நல்லதோ..கெட்டதோ
ஏதேனுமொன்றையாவது
ஏற்றி வருகின்றன..
தினசரிகள்..இரயில் பற்றி.!!"
"இரயிலை இங்கேயே நிறுத்தி
இறக்கி விடவா என
மிரட்டுகிறார் பரிசோதகர்....
மேல் பெர்த்திற்கு
ஏறவும், இறங்கவுமாய்
இருந்த சிறுவனை.
புன்னகைகிறாள் அம்மா.!!"
"ஒரு அதிவேக இரயில் வண்டி
மிக அருகில் கடக்கும்போது
அதிர்வதைப் போலிருந்தது மனது.
நீ நெருக்கமாக
என்னைத் தாண்டி நடந்தபோது.!!"
"சக பயணிகளோடே
இறங்கி விடுகின்றன..
பயணங்களின் போது
உதிக்கின்ற கவிதைகள்.!!"
"எங்கேயென்று தேடுவது..
மீண்டும் சந்திப்போம்
என்று கைகுலுக்கிப்
பிரிந்த..
என் இரயில் சிநேகிதர்களையெல்லாம்.!!"
"இந்த இரயில் பெரும்பாலும்
இவ்வளவு தாமதமாகது
என்று சக பயணிகளிடம்
சொல்லிக் கொண்டிருந்தனர்..
மாதா மாதம் மகன்கள்
வீட்டிற்குப் பயணிக்கும்
வயதான தம்பதிகள்.!!"
"இன்னமும் அந்த
இரயில் நிலையத்தில்
மிச்சமிருக்கும்...
ஒவ்வொரு ஜன்னலாய்
உன்னைத் தேடிய தேடல்கள்.!!"
"இரயிலில் இந்த முறை
கைக்குட்டை விற்பவரிடம்..
சென்ற பயணத்தின் போது
பேரம் பேசி
பழைய புத்தகங்கள்
வாங்கிய ஞாபகம்!"
"ஒவ்வொரு
இரயில் நிறுத்ததிலும்
ஜன்னல் வழியே கை மாறுகின்றன..
காபியும்.....காசுகளும்.!!"
"ஒற்றைத் தண்டவாளத்தைப் போன்றது...
நீ ஏற்றுக் கொள்ளாத
என் காதல்.!!
"பயணிகள் கவனிக்கவும்..வண்டி எண்........'
அறிவிப்பாளினியின் குரல்
ஒலித்துக் கொண்டிருந்தது....
இரயில் நிலையம் விட்டு
வெகு தொலைவு வந்து விட்ட
மனதுக்குள்.!!"
"ஏதேனும் பணி நிமித்தம்
அவசரமாகச் செல்லும்போது
மூடப்படும் இரயில் பாதை கதவின்
மீதான கோபம் .....இரட்டிப்பாகிறது...
தாமதமாக வந்தும், மெதுவாக உருளும்
கூட்ஸ் வண்டியைப் பார்க்கும்போது.!!"
"நானறியாமல் குறுக்கிட்டாய்
என் வாழ்க்கைப் பாதையில்.
தடம் புரண்டது மனது.!!"
-த.பிரபு குமரன்
Thursday, February 21, 2008
மதிப்பு
Tuesday, February 19, 2008
வண்ணம்
Monday, February 18, 2008
மண் உண்டியல்
"காசு போடும் நேரம் தவிர
கடந்து போகும் நேரமெல்லாம்
குலுக்கிப்பார்க்கப்படுகிறது
மண் உண்டியல்.!!"
"தன்
குட்டி மகனின்
மண் உண்டியல் காசுகளிலும்
குடித்துக் குடித்தே
இறந்து போன ஒரு
இளம் அப்பாவின்
இறுதிச்சடங்கில் உடைக்கப்படுகிறது
ஒரு மண்பானை.!!"
"உண்டியல் உடைத்து
சில்லறைகள் பிரித்தாலும்
ஒட்டிக்கொள்கிறது மண்..
கைகளிலும்,
உடனே மாற்றும் ரூபாயிலும்!!"
"உண்டியல் வாய்க்குள்
சிணுக்கோலி நுழைத்து
உருவப்படுகின்றன காசுகள்.
முறுக்கோ,மிட்டாயோ வாங்குவதற்க்கு.!!"
"என்
உண்டியலை தலைகீழாக
உலுக்கி உலுக்கி
உருண்ட காசுகளிலிருந்து
வந்தன இரண்டு கலர் கோழிக்குஞ்சுகள்.......
ஏன்டா, பொழப்பத்த வேல பாக்குற...
என்றாள் அப்பத்தா.
ஏற்கனவே எலக்கணமா படிக்குற,
இன்னம் இது வேற, என்றாள் அம்மா.
கோழி வளக்குறேன்...
கொசு வளக்குறேனு, படிப்ப கோட்டை விட்டே......
கர்ஜித்தார் அப்பா.
என் காதில் எதுவும் விழவில்லை
கோழிகளின் கீச்..கீச் சத்தத்தில்.
என் கோழிக்குஞ்சுகளை
மதிக்கவில்லை யாரும் - என்னைப் போலவே.
ஆனால், வீட்டில் சுதந்திரமாகத் திரிந்தன,
என்னை விடவும்.
கோழிகளின்
நொழு,நொழு உடலும்,
வண்ணங்களும், சத்தங்களும்
பரவசப்படுதின என்னை.
உண்டியலில் கை வைக்கும்போதெலாம்
கோழிகளுக்கு கம்பும்,சோளமும்..
எனக்கு கமர்கட்டும்,சிவிங்கமும்.
ஆடைகளற்ற குழந்தை போல்
இன்னும் அழகாயின கோழிகள்...
வண்ணச்சாயம் போன பின்பு.
அடுக்களையிலிருந்து
அலறுவாள் அம்மா, 'டேய்..
இத எங்கியாச்சும் பிடிச்சுட்டுப் போ..
காலுக்குள்ளயே சுத்துது,
கொழம்பாயிரப் போவுது....!
என் மீதுள்ள கோபத்தில்
எதையாவது எட்டி உதைப்பார் அப்பா..
எச்சத்தை மிதிக்கும் போதெல்லாம்.
நானோ, கோழிகள் கூவி விழித்து
கோழிகளோடே உறங்கினேன்.
நாளடைவில்
என் குடும்ப உறுப்பினராயின
கோழிகள்.
உணவு வைத்து விடுவாள் அம்மா.
நான் வரத் தாமதமானாலும்.!
பக்கத்து வீட்டுப் பூனையை
குச்சி வைத்து விரட்டுவார் அப்பா..
கோழிகளைக் காக்க.
ஏய்யா..
கொட்டாங்குச்சில தண்ணி வச்சு மூடுய்யா
கொட்டானை, ராத்திரில குடிச்சுக்கும்
என்பாள் அப்பத்தா.
பின்னாளில்
இப்போதும் தோன்றுகிறது..
இறக்கைகளிலிருந்திருக்கலாம் எனக்கும்.
ஆம்.. வாங்கும் போது
மஞ்சள் நிறமிருந்த மஞ்சுளாவையும்,
பச்சை நிறமிருந்த பத்மாவையும்
பார்த்துக் கொண்டிருக்கும்போதே
படக்கென்று தூக்கிப்போன
பருந்திடமிருந்து
பறித்திருக்கலாம் விரட்டிச்சென்று.
இன்றும்.. சாலையோரங்களிலோ
மிதிவண்டியின் பின்னாலோ
கூடைகளிலிருந்து
கத்திக்கொண்டிருக்கின்றன..
கலர் கோழிகள்...
பருந்திடமும், பூனையிடமும் மற்றும்
என் போன்ற மனிதனிடமிருந்தும் காப்பாற்றும்படி.
வீட்டில்..
ஏதோ சத்தம் கேட்டு, திரும்பியபோது,
என் குட்டி மகள்
உடைத்துக்கொண்டிருந்தாள் மற்றுமொரு
உண்டியலை...!!
-த.பிரபு குமரன்
உன் மீதான பேரன்பு
"வேண்டாமென்று
வெட்டி விட்டாய் நீ.
உன் மடியில்
சந்தோஷமாக மடிந்தன..
என் விரல் நகங்கள்..!"
"அடுத்து உன்னை
சந்திக்கும்வரை
என் விரல்களுக்கு
சொடுக்கெடுக்காமல்
வைத்திருப்பேன்..!"
"ஒரு மழை நாளில்
குடை சாய்த்து..
தூறலில் நனைந்து சிலிர்த்தாய்.
குடை சாய்ந்தது மனது.!"
"அடிக்கடி
கனவுகளில் வருவாய்.
ஆனால் எப்போதாவதுதான்
பேசுவாய். அதுவும்....
'உன்னை ரொம்ப பிடிச்சிருக்குடா'
என்பாய்..!"
"இரவில்
பணிமனைக்குத் திரும்பும்
காலிப்பேருந்துகளைப் போலிருக்கிறது
நீயில்லாத தனிமை..!"
"இதுதான் காரணம்
என்றில்லை..
நாம் அடிக்கடி
சண்டையிட்டுக் கொள்ள.
முத்தமிட்டுக் கொள்வதும்
அது போலத்தான்..!"
"என் காதலை உனக்கு
அனுப்பி வைத்து விட்டு
உன் இதயப் பக்கங்களில்
நீ
பிரசுரிக்கும் நாளுக்காகக்
காத்திருக்கிறேன்.!"
"உன்னோடு
பழகிய பின்புதான்
தெரிந்து கொண்டேன்.
இரவு எத்தனை நீளமானது..!!!!"
"நீ
என் அருகில்
இல்லாத போதுதான்
நான் உன்னோடு
பேசுவது அதிகம்..!"
-த.பிரபு குமரன்
உன்னைக் கண்டுபிடித்தேன்..
"மூன்றாவது வரிசையில்
நான்காவதாக நின்றிருந்தாய்
உன் பள்ளிக்காலப்
புகைப்படத்தில்.
உடனே உன்னைக் கண்டுபிடித்ததில்
அதிகம் ஆச்சர்யப்பட்டாய்
ஆனந்தப்பட்டதைவிட.
எனக்கேதும் ஆச்சர்யமில்லை..
என்னை நானே கண்டுபிடித்ததில்...!"
"உன்னுடனான பயணங்களில்
எனக்கும் பிடித்திருந்தும்
விட்டுக் கொடுக்கிறேன்..
ஜன்னலோர இருக்கையை....
நீ இயற்கையை
இரசிப்பதற்கும்,
நான் உன்னை
இரசிப்பதற்கும்..!"
"நீ
அறைந்து மூடும்
கதவில் ஊடலும்...
பின்
ஒளிந்து பார்க்கும்
ஜன்னலில்
என் மீதான
உன் காதலும்
வெளிப்படும்..!"
"மை
தீர்ந்து போகாத
என் பேனாக்களிலெல்லாம்
எழுதப்படாத
கவிதைகளாய் இருக்கிறாய்
நீ..!"
"புதிதாய் வாங்கிய
புத்தகத்தின்
வாசனையைப் போன்றது..
ஏகாந்தமான
உன் நினைவுகள்.!"
"எதையாவதும்
தொலைப்பதே
உன் வேலை என்பாள் அம்மா.
எப்படிச் சொல்வேன்
என்னைத்
தொலைத்ததை..?"
"உருப்படியாக
ஏதாவது செய்திருக்கிறாயா
என்பார் அப்பா.
என்றேனும் சொல்லவேண்டும்
உன்னைக்
கண்டுபிடித்திருப்பதை."
-த.பிரபு குமரன்
இழந்த சொத்துக்கள்
சகதிக்குள்
சிக்கிக்கொண்ட
என் காகிதக் கப்பல்.
புதர்களுக்குள்
புதைந்து போன
என் கிட்டிப்புள்.
வாத்தியாரிடம் தந்துவிட்டு
வாங்க மறந்த
என் சைனா பேனா.
பெரிய பையன்களுடன்
விளையாடித் தோற்ற
என் தீப்பெட்டிப் படங்கள்.
விளையாட்டாய்ப் போட்ட சண்டையில்
விட்டுப் போன...
புதுச்சட்டைப் பொத்தான்கள்.
ஓட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டு
தொலைந்து போன
என் கோலிக்குண்டுகள்.
அடுத்த வீட்டு நண்பன்
ஆக்கர் போட்டு உடைத்த
என் அழகான பம்பரம்.
திரையரங்கில்
விட்டு வந்த
புதுக் காலணிகள்.
பள்ளியில் பறிகொடுத்த என்
பலப்பக் குச்சிகள்.
கரன்ட் கம்பிகளில்
மாட்டிக் கொண்ட என்
வண்ணக் காத்தாடிகள்.
நண்பர்கள் முந்திக் கொண்டு
உடைத்த என்
மணல் வீடுகள்.
எதிர் வீட்டின்
ஜன்னலைத் துளைத்த
என் கிரிக்கெட் பந்து.
ஆளுக்குப் பாதி என்ற பின்னும்
நண்பனே விழுங்கிவிட்ட
என் நாலணா மிட்டாய்.
எட்டு நாளாய் வளர்த்து
எலி பறித்துப் போட்ட
என் எலுமிச்சைச்செடி.
திமிறத் திமிற...
மெஷின் வைத்து
வெட்டப்பட்ட முடி.
முதல் மதிப்பெண் வாங்கினால்..............
சைக்கிள்...!
இழந்தசொத்துக்கள்..
கடைசிவரை நான்
வாங்காமலே போன சைக்கிளும்,
வாங்காத சைக்கிளில்
ஏறித் தொலைந்து போன
என் பால்யமும்.!
-த.பிரபு குமரன்.
பலூன்
"பலூன் வேண்டுமென்று
கேட்டழுத குழந்தை,
வாங்கிக் கொண்டது...
அடிகளை.
பலூன் விற்கும் அப்பாவிடமிருந்து...!"
"வெடித்து விடுமோ என்ற
பயத்திலேயே
பெரிதாக்கியதில்லை
பெரும்பாலான
பலூன்களையும்,
பிரச்சனைகளையும்...!"
"பொம்மை, பலூன் என்று
வாசலில் புள்ளியின்றிக்
கோலமிடும் சிறுமிகள்....
ஒரு ஞாயிறு காலை.!"
"திருவிழா முடிந்த இரவு.
ஆளில்லாத சாலையில்
காற்றில்லாத மிதிவண்டியை
விரைந்து உருட்டுகிறான்
பலூன்காரன்.
காற்றடைத்து விற்காமல்போன
சில பலூன்களுடன்....!"
-த.பிரபு குமரன்
காதல் தவம்
"நீ
பட்டாசு வைப்பதை விட
அதிக நேரம்
வெளியில் நின்று விளக்கு வைப்பதால்
தீபாவளியை விட
கார்த்திகை பிடித்திருக்கிறது
எனக்கு."
"என் வீட்டு
நாள் காட்டியை
நான் கிழிப்பதேயில்லை.
உன்
பிறந்த தினத்திலிருந்து."
"உன்னிடமிருந்து
எதிர்பார்த்து.. எதிர்பார்த்து
ஏமாந்த அழைப்புகள்.
பதிலாக... பயனற்றே கிடந்திருக்கலாம்
என்
தொலைபேசியும்,கைப்பேசியும்."
"எனக்காக
என்ன செய்திருக்கிறாய் என்கிறாய்.
எப்படி முடியும்...
என்னையே நான்
தொலைத்த பின்பு."
"உன் வருகைக்காக
காத்திருக்கும் நேரத்தில்
உதவும் என்றுதான்
வாங்கிய வார இதழ்.
வெறுமனே பலமுறை
பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருக்கிறேன்...
அதுவும் தலைகீழாக..!"
"ஒவ்வொரு முறை
உன்னை
சந்திக்கும் பொழுதும்,
யோசித்து வைத்திருந்த
வார்த்தைகளைப்
பேசியதே இல்லை."
"இந்த
சந்திப்பின்போதுகூட
உனக்கான
என் பரிசைக் கொடுக்கவில்லை
வாங்கி வந்திருந்தும்."
"நீயே
எல்லாமுமாக இருக்கும்போது
எப்படிச் சொல்வேன்..
இந்தக் கவிதையை
நான்தான் எழுதினேனென்று."
-த.பிரபு குமரன்
இதுவும் உனக்கான வருடம்.....
"உன் மீதான
என் காதலை
நீ ஏற்றுக்கொள்ளும்
தினத்திலிருந்து பிறக்கும்...
எனக்குப் புது வருடம்."
"காத்திருக்கிறேன்.
மீண்டும் உன்னை
வாழ்த்தப் போகும்
உன் பிறந்த தினத்துக்காகவும்,
பண்டிகைகளுக்காகவும்."
"மிகச் சாதாரண
நாட்களாகி விடும்
உன்னைக் காணாத தினங்கள்.
ஞாயிற்றுக்கிழமையில் வந்துவிடும்
அரசு விடுமுறை போல."
"நம்பிக்கையிருக்கிறது.
உன்னிடம் எதுவும்
சொல்லப் போவதில்லை...
வரப் போகும்
காதலர் தினத்திலும்."
"கோயில் பிரகார
புறாக்களைப் போல
பதைபதைத்து,
சிறகடித்துக் கொண்டிருக்கின்றன..
சென்ற வருடம் உன்னிடம்
சொல்லாத சொற்கள்."
"நீயே நிரம்புவாய்.
இந்த வருட
நாட்குறிப்பின்
பக்கங்களிலும்."
"இந்த ஆண்டின்
இலட்சியமாக...
இன்னும் அதிகமாக
நேசிக்க வேண்டும் உன்னை."
"தவணை முறையிலாவது
தந்து விடுவேன்..
பிப்ரவரி
இறுதியில்
இல்லாமல் போன
நாட்களுக்கான அன்பையும்."
"இந்த வருடமும்
விற்க மாட்டார்கள்
என்னிடம்,
உன் பெயர் முதலில்
எழுதத் தெரியாத
பேனாக்களை."
"உன்
முதல் சந்திப்பிற்கு
முந்தைய.....
வீணாய்ப்போன
வருடங்கள் குறித்த
வருத்தம் எனக்கு."
-த,பிரபு குமரன்.
கோலம்
"பண்டிகைக்கான கோலத்தை
முதல்நாள் இரவே
இட்டு விட்டு
உறங்கச் சென்று விடுகிறாய்.
மறுநாள் மறுபடியும்
உன்னைக் காண்பதற்காக
காத்துக் கிடக்கிறோம்
நானும், உன் கோலமும்."
"உன் கோலத்தின்
ஒவ்வொரு
வண்ணங்களிலும்
உன் கைவண்ணம்."
"அழித்து, அழித்து..
வலுக்கட்டாயமாக
வரைந்து கொண்டிருக்கிறாய்
வராத ஒரு கோலத்தை.
நான் தினமும்
உன் பெயரை
எழுதிக் கொண்டிருப்பதைப் போல."
"அடுத்த வீடுகளின்
கோலங்களைச் சென்று
இரசித்துக் கொண்டிருந்தாய்.
ஒரு கோலம் நகர்வதைப் பொல."
"வழக்கம் போலவே
கவனமாகத் தாண்டிச் செல்கிறேன்
உன் வாசலை.
அடுத்த சில நிமிடங்களில்
நீ கோலம் போடக்கூடுமென்று."
"உனக்குப் பெருந்தன்மை அதிகம்.
பக்கத்து வீட்டு கோலங்களைப் போய்
அழகென்று பாராட்டிக்கொண்டிருந்தாய்."
"தைப்பொங்கல் என்றால்
பானையும், கரும்பும்..
தீபாவளி என்றால்
தீபங்களும், மத்தாப்பும்..
கிறிஸ்துமஸ் என்றால்
தாத்தாவும், மணியும்... என்று
அடையாளப்படுத்தி கோலமிடுவாய்.
உன்
பிறந்த நாளுக்கும்
வரைகிறாய்...
மிக அழகான ஒரு கோலம்."
"முன்போல கிடைப்பதில்லை
என்று வருத்தப்பட்டுக் கொண்டாய் நீ.
ஆனால் உன் வாசலுக்கு வர
வழி தெரியாமல்
வருத்தப்பட்டுக் கொண்டிருந்தது
எங்கோ பூத்துக் கிடந்த
பூசணிப்பூ."
"வீட்டுக்குள் கோலமிட்டிருந்தன..
கலர் கோலத்தை
மிதித்து விட்டு வந்திருந்த
குழந்தைகளின் பாதங்கள்."
-த.பிரபு குமரன்
மார்கழி
"அதிகாலை நான்கு மணி.
பரீட்சைக்காக
படித்தபோது
மனப்பாடமாகியது...
எங்கோ ஒலித்துக்கொண்டிருந்த
பஜனைப் பாடல்கள்."
"சென்ற வருடம் போல்
இந்த வருடம்
பனி அதிகமில்லை
என்று சொன்ன தாத்தா
இருமிக் கொண்டிருந்தார்
இந்த மார்கழி மாதமும்."
"ஒரு மார்கழி மாத
மழை நாளில்...
மின் விசிறியின்
வேகம் குறைத்ததும்
அதிகமாக கேட்க ஆரம்பித்தது..
தவளைகளின் சப்தம்."
"இழுத்துப் போர்த்தி
உறங்கத் தோன்றும்
அதிகாலைப் பனி நேரத்திலும்
எங்கோ விரைகிறது... ஒரு
அதிவேக இரயில் வண்டி."
"ஸ்வெட்டர் போட்டிருந்தன..
ஒரு மார்கழி மாத நாளின்
மதியத்தில்
மருத்துவரிடம் வந்த குழந்தைகள்."
"மீண்டும் தீண்டுவதற்கு
காத்திருந்தது ...
பின்னிரவுப்பனி,
சூடான தேநீரை
பருகி முடிக்கும் வரை."
"அதிகாலைப்
பேருந்துப் பயணம்.
குழந்தைக்கு
குல்லா எடுக்க
மறந்த மனைவியை
முறைக்கிறான் கணவன்."
"மாலை 7 மணி.
வெறிச்சோடிக் கிடக்கின்றன
தெருக்கள்.
குழந்தைகளுக்கு பதிலாக
விளையாடுகிறது பனி."
"வெகு நேரம்
உறங்கி எழுந்த படுக்கை விரிப்பை
உதறிய போது
சிதறி ஓடின...
விக்ஸ் டப்பாவும் - ஒரு
அமிர்தாஞ்சன் பாட்டிலும்."
"மார்கழி மாதத்து
அடர்ந்த பனி போல
பரவியிருக்கிறது
உன் நினைவுகள்."
"சிலருக்கு மட்டுமே
வருகிறது...
உறங்கும்போது எழுந்து
மின் விசிறியை
நிறுத்தும் சுறுசுறுப்பு."
"நான் கைகள் கட்டி
அதிகம் மரியாதை கொடுத்தது
மார்கழிப்பனிக்காகத்தானிருக்கும்."
"நகரம் நிறைகிறது..
பனியாலும்...
ஐயப்ப பக்தர்களாலும்."
-த.பிரபு குமரன்
கால முரண்பாடு
"அன்புக் காதலனே...
குளிர் காலம் என்றால்
டி.சர்ட்டும், இரவுப் பேன்ட்டும்...
கோடையென்றால்
வெறும் முண்டா பனியனோ அல்லது
வெற்றுடம்போடு ஒரு பெர்முடாஸை
அனுமதிக்கிறது காலமும், சூழலும்.
எனக்கேதும் கண்டு பிடிக்குமா..
என் மீதான உன் பேரன்பு..
கால நிலைகளிலிலிருந்து
காத்துக் கொள்வதற்கு.!
இப்படிக்கு..தமிழ்க் கலாச்சாரம்
தவற முடியா உன் காதலி.!!!!"
-த.பிரபு குமரன்
வாழ்க்கைத் தேடல்
நிராகரிப்பு
எனக்குள் நான்
கொந்தளிக்கும் கடலுக்குள்
நின்று கொண்டும் நனையாமல்
நான்.
பாலைவனத்தில் புரண்டு கொண்டும்
மீசைதனில் மண்ணில்லாமல்
நான்.
இருளினுள் துழாவிக் கொண்டும்
வெளிச்சப் பிரபஞ்சமாய்
நான்.
காற்றில் தவழ்ந்து கொண்டும்
புயலுக்குள் தென்றலாய்
நான்.
காமத்தில் விளையும்
காதலில் சிக்கிக் கொள்ளவில்லை
நான்.
பாசத்தின் பாவனைகட்குள்
பக்குவப்பட்டுப் போகவில்லை
நான்.
போலிகளின் போதனைக்குள்
மெய்யைத் தேடும் மாயையாய்
நான்.
இழிவாய்ச் சிரிக்கிறது...
எனைப் பார்த்து என் பிம்பமும்.
இருப்பினும்
நான் நானாகவே.!!
-த.பிரபு குமரன்
காற்றில் அலைகிறேன்
என்னைப் புரிதல்
காரணமற்று நீளும் இரவுகள்.
சலனமற்று உறங்கும் பகல்கள்.
விடியலில் மறைந்தும் மறையாமலும்
அந்தியில் உதித்தும் உதிக்காமலும்
விளையாடும் எனக்கான சூரியன்......
என்னைப் புரிதலுக்கான விடைகளோடு
என் பிரபஞ்சப் பால்வெளியில்
சிதறிக் கிடக்கும் நட்சத்திரங்களுக்குள்
ஒளிந்து கொண்டு புன்னகைகிறது
யாருக்கும் புலப்படாமல்.
ஏன்...எனக்கே புலப்படாமல்.!!
-த.பிரபு குமரன்
நான் நீயாகிறேன்
"உன்னை முதன்முதலில்
ஒரு கண்காட்சியில் பார்த்தபோது
ஒரு குழந்தையைப் போல் குதூகலித்து
பலூன் வாங்கிக் கொண்டிருந்தாய்.
அதன் பிறகு கண்காட்சியை
இரசிக்கவில்லை நான்.!!"
**********
"என் காதலை
உன்னால் மதிப்பிட முடியாது.
எனவேதான்
சொல்வதேயில்லை உன்னிடம்.!!"
**********
"உன் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.
மயிலிறகு குட்டி போடும் என்று
நம்பிக் கொண்டிருக்கும்
பள்ளிச் சிறுவனைப் போல.!!"
**********
"உன் பெயர் வேண்டுமானால்
எழுதியிருப்பேன்...
கணக்கில்லாமல்.
மற்றபடி
கவிதைகள் எழுதிப்
பழக்கமில்லையெனக்கு.!!"
**********
"உன் நிறுத்தத்தில்
நீ இறங்கியதுமே
வெறுமையானதாய்த் தோன்றுகிறது..
மனதும்,
கூட்டம் வழியும் பேருந்தும்.!!"
**********
"என் கனவுகளில்
நீ வரும்போதெல்லாம்
விழித்துக் கொள்கிறேன்.
தயவுசெய்து...
கொலுசுகளைக் கழற்றி வை.!!"
**********
"உனக்காக எழுதியதுதான்
என்றாலும்...
உன்னிடம் வாசித்துக் காட்டிய
பின்புதான் கவிதைகளாகின்றன.!!"
**********
"உனக்குரியதை உரிமையோடு
நீ எடுத்துக் கொள்ளும்போது
எப்படிச் சொல்வேன்...
இதயத்தைத் திருடி விட்டாய் என்று?!"
**********
-த.பிரபு குமரன்
ஞாயிற்றுக்கிழமை
"ஞாயிற்றுக்கிழமை காலை.
ஒட்டடைக்கம்பு
தேடுகிறார் அப்பா.
பணியாரக்கம்பி
தேடுகிறாள் அம்மா...!"
"வழக்கமான
சோம்பலுடனே கழிந்தது..
இந்த ஞாயிற்றுக்கிழமையும்....!"
"ஞாயிறு மதியம், பனிரெண்டு மணி.
வீட்டிலும்,தெருவிலும்
காற்றில் அசைவ வாசனை...!"
"நினைத்துக் கொண்டபடி
வெகுநேரம் தூங்க முடிந்ததில்லை..
எந்த ஞாயிற்றுக்கிழமையும்..!"
"இன்னும் சந்திக்கவே இல்லை.
ஏதேனுமொரு
ஞாயிற்றுக்கிழமையில் சந்திக்கலாம்
என சொல்லிக்கொண்ட பலரை...!"
"பள்ளிப்பிராயத்தில்
வேண்டுதல்கள் அதிகம்.
ஞாயிற்றுக்கிழமை முடியாமலிருக்கவும்,
திங்கள்கிழமை விடியாமலிருக்கவும்....!"
"பொறாமையாயிருக்கிறது.
தினமும் ஞாயிற்றுக்கிழமை
அனுபவிக்கும் குழந்தைகளையும்,
வயதானவர்களையும் நினைத்து...!"
"எப்படியாயினும் சனிக்கிழமை
மதியமே தொற்றிக்கொள்கிறது...
ஞாயிற்றுக்கிழமையின்
ஞாபகமும், சந்தோஷமும். - கூடவே
திங்கள் பற்றிய திகிலும்...!"
-த.பிரபு குமரன்
மழை
"மழைக்காலம்தான்.
எனினும்,
மழை வரும் முன்பே
நனைய ஆரம்பித்துவிடுகிறது
மனசு.!"
"எதிர்பார்த்து....
வராத மழையால்,
எப்போதோ நனைந்த
ஈர நினைவுகளோடு
வீடு வந்தேன்."
"கூட்டம் நெட்டித்தள்ளும்
நகரப் பேருந்துகளில்
கேட்பாரற்றுக் கிடந்தன...
ஜன்னலோர இருக்கைகள்,
ஒரு பெருமழை நாளில்."
"நடுநிசியில்,உறங்கும் பொழுதுகளில்
நானறியாமல் பெய்துவிட்டு
நின்று போகும்
எனக்குப் பிடித்த மழையைப்போல,
நான் கவனித்திராத
எத்தனையோ தருணங்களில்
என்னைக் கடந்திருக்கக்கூடும்
நீ..!"
"நனைந்து கொண்டிருந்தேன்...
உனக்கும் பிடிக்கும்
என்று நீ மழை பற்றி
பேசிக்கொண்டிருந்த..
ஒரு மழையற்ற பொழுதில்."
"ஒரு மழை நாளின்
மாலை வேளையில்
நிகழ்ந்தது
நம் கடைசிச் சந்திப்பு.
அன்று
என் மீது மட்டும்
வெந்நீராக விழுந்தது மழை."
"மழையில் நனையக்கூடாது..
என்ற உன் இதமான
கண்டிப்பைவிட
சுகமானது.....
நனைந்த பின் துவட்டிவிடும்
உன் அன்பு."
"சிறு வயதில்..
மழை நீரில்
இழுத்துச் செல்லப்பட்ட
என் காகிதக் கப்பல்கள்
எங்கே தரை தட்டியிருக்கும்..?"
"மழைக்காலம்
வந்தாலே
வந்துவிடுகின்றன..
சந்தோஷமும்,
சகதியும்."
"கண்டிப்பாய் மழை வரும்.
இந்த பள்ளிக்கூட மணி
சீக்கிரம் அடித்தாலென்ன?
இன்றாவது நனைய வேண்டும்."
"அடாத மழை.
கொல்லைப்புற சுவரில்
விடாமல் இரை தேடிய
எறும்புகள்
என்னவாகியிருக்கும்..?"
"ஒவ்வொரு
மழைக்காலத்திலும்
நிகழ்கிறது...
குடை எடுத்துச் செல்ல
மறப்பது."
"மழை நாட்களில்...
வேண்டுமென்றே
நனைவதும் பிடிக்கிறது..
குடை இருந்தும்..!"
-த.பிரபு குமரன்.
Subscribe to:
Posts (Atom)