முதன்முதலாய் தெருவில் விளையாட வந்தபோதுதான்
அறிமுகம்...நண்பனாக.
எனக்கு மறுபடியும் விரல் சூப்ப
ஞாபகப்படுத்தியதே அவன் தான்.
பிற்பாடு... ஒரே வகுப்பில்..
அவன் மட்டும்தான் அழுதான்..
பொய் சொல்லியிருக்கிறேன் அம்மாவிடம். அவனும் அப்படித்தான்.
அவன் விடுப்பு எடுக்கும் நாட்களில்
எனக்கும் விடுப்புதான்....
எக்கச்சக்க அடிகளுடன்.
நாங்கள் இருவரும் கால்சட்டைகூட போடாமல்
காத்தாடி விட்டுக் கொண்டு ஓடியிருக்கிறோம்.
அய்யனார் கடை அஞ்சு பைசா அப்பளப்பூவை
அளந்து அளந்து காக்காய் கடி கடித்திருக்கிறோம்.
கமலுக்கும், ரஜினிக்குமாய் அடிக்கடி
கட்சி மாறியிருக்கிறோம்.
பெஞ்சு மேல் நிற்க வைத்த வாத்தியாரின் பேனாவை
தண்டவாளத்தில் வைத்திருக்கிறோம்.
பிடிக்காத பையனின் வீட்டுப்பாட நோட்டில்
கப்பல் செய்திருக்கிறோம்.
தேன்கூட்டில் கல் எறிந்துவிட்டு
திக்குத் தெரியாமல் ஓடியிருக்கிறோம்.
கொய்யாப்பழம்,கொடுக்காப்புளி திருடிவிட்டு
குட்டிச் சுவரேறிக் குதித்திருக்கிறோம்.
ஒளிந்து பிடித்து விளையாடிய இரவுகளில்
காட்டிக் கொடுக்காமல்,விட்டுக் கொடுத்திருக்கிறோம்.
விட்டு விட்டு எங்காவது சென்றிருந்தால்...
விளையாட்டாய் அடிக்கடி 'டூ' விட்டிருக்கிறோம்.
எங்களை 'மொட்டையும் மொட்டையும் சேந்துச்சாம்...'
என்ற பயல்களை இருவரும் சேர்ந்து மொத்தியிருக்கிறோம்.
நான் கஷ்டப்பட்டுப் பிடித்திருந்த தட்டான் பூச்சிகளை
அவன் தட்டி விட்டுப் பறக்க விட்டதற்காக
நிஜமாகவே ஓர் நாள்....
'காய்' விட்டு ஒதுங்கிக் கொண்டதென்னவோ நான் தான்.
எங்கள் அம்மாக்கள் பேசிக் கொண்டிருந்தபோதுகூட
நாங்கள் வேறு திசையை வெறித்துக் கொண்டிருந்தோம்
பெரிய மனிதர்கள் போல.
மறுபடியும் 'பழம்' விட்டுப் பேசியபோதுதான் சொன்னான்...
தாங்கள் வேறு ஊருக்குப் போகப் போவதாய்.
வெளியில் எதையாவது தொலைத்து விட்டு
வீட்டில் சொல்லாமல் திரிவது போல்...
வெறுமையுடன் திரிந்தோம்..எங்களைத் தொலைத்து விட்டு.
அவன் வீட்டிலும்..என் வீட்டிலும்
காலணி, பொம்மை, கலர் பென்சில் என்று
இடம் மாறிக் கிடந்த உடைமைகளைக்கூட
பரிமாறிக்கொள்ளவில்லை மீண்டும்.
எனக்கு அவன் அப்பாவும், அவனுக்கு என் அப்பாவும்
இந்த முறை பரிசளித்த ஞாபகார்த்த பொம்மைகளில்
சந்தோஷமில்லை.
ஆயிற்று...அவனும், அவன் அப்பா அம்மாவும்
'டாட்டா' சொல்லிவிட்டுக் கிளம்பியபோது...
சாலை வரை வந்து வழியனுப்பிய
என் அப்பா, அம்மா திரும்பி நடக்க...
நான் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன்....
அவன் போன வண்டி
புள்ளியாய் மறையும் வரை.!!
-த.பிரபு குமரன்